24 September 2014

அரண்மனை - ARANMANAI - தங்கலாம் ...



பெரிதாக மண்டையை உடைத்துக் கொள்ளாமல் தனக்கு தெரிந்த கமர்சியல் பார்முலாவை மட்டும் வைத்து வரும் ரசிகனை திருப்திப்படுத்தி அனுப்புவதில்  வல்லவர் சுந்தர்.சி . ஹரர் லைனை கையில் எடுத்திருந்தாலும் வழக்கமான பேய் படத்துக்கு  தன்னுடையை காமெடி பெப்பை ஏற்றி அரண்மனை யை போரடிக்காமல் பார்க்க வைக்கிறார் இயக்குனர் ...

ரொம்ப நாட்கள் பூட்டிக் கிடக்கும் தங்கள் பூர்வீக அரண்மனையை விற்க முடிவெடுக்கிறார்கள் வாரிசுகள் . அரண்மனையில் தங்கும் சில நாட்களில் 3 வேலைக்காரர்கள் மர்மமான  முறையில் சாக அங்கு பேய் இருப்பது தெரிய வருகிறது . பேய்க்கு என்ன ப்ளாஷ்பேக் ? பேய் பீடித்திருக்கும் தன் தங்கையையும் , தன்  தங்கையிடமிருந்து மற்றவர்களையும் வக்கீல் சுந்தர்.சி எப்படி காப்பாற்றுகிறார் என்கிற இந்த சந்திரமுகி கதைக்கு சந்தானத்தை வைத்து கமர்ஸியல் சந்தானம் பூசியிருக்கிறார் சுந்தர்.சி ...

நடிகனாக அடக்கி வாசித்து படம் முழுவதும் நடிகர் பட்டாளத்தையே திறம்பட சமாளிததில் இயக்குனராக பாராட்டு பெறுகிறார் சுந்தர்.சி . ஹன்சிகா , ஆண்ட்ரியா , ராய் லக்ஷ்மி என மூன்று ஹீரோயின்களுக்கும் சம விகிதத்தில் ஸ்பேஸ் கொடுத்தது ,  சந்தானம் , சரளா , மனோபாலா என எல்லோரையும் சரியான முறையில் பயன்படுத்தியது என எல்லாவற்றிலுமே இயக்குனரின் அனுபவம் அசத்துகிறது ...


மூன்று பேரில் ராய் லக்ஷ்மி ராவாக இருந்து சுண்டி இழுத்தாலும் அடாவடி  ஆண்ட்ரியாவும் , அப்பாவி ஹன்சிகா வும் மனதை தொடுகிறார்கள் . க்ளோஸ் அப் காட்சிகளில் அதீத மேக் அப்புடன் வரும் ஆண்ட்ரியா பேயை விட பயமுறுத்துகிறார் . கொடுத்த காசுக்கு ராய் லக்ஷ்மி யை குனிந்து , நிமிர விட்டு நன்றாகவே வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் . நடிப்புக்காக இல்லாமல் நிஜமாகவே அம்மணி உடற்பயிற்சி செய்வது நல்லது . மூணு , நாலு டயர் ஏறியிருக்கிறது . வினய் , நிதின் சத்யா படத்தில் இருக்கிறார்கள் .
" பெட்ரோமாஸ் " பாடலுக்கான இசையில் பரத்வாஜும் , பின்னணி இசையில் கார்த்திக் ராஜாவும் கவர்கிறார்கள் . செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் , சி.ஜி வேலைகளும் படத்திற்கு பலம் ...

படம் ஆரம்பித்தவுடனேயே நேரத்தை கடத்தாமல் அரண்மனைக்குள் நம்மை திகிலுடன் அமர வைத்து விடுகிறார்கள் . நடுநடுவே காமெடி இருந்தும் இடைவேளை வரை திரைக்கதையும்  க்ரிப்பாகவே  செல்கிறது . " மூடு வரதுக்கு முருங்கைக்காய் சாப்பிடலாம் , இங்க ஒரு முருங்கைக்காயே மூடோட சுத்துதே " என்று மனோபாலாவை சந்தானம் சத்தாய்க்கும் வசனங்கள் நச் . இடைவேளைக்கு பிறகு தான் படம்  கோவில் திருட்டு , அந்த பழியை பெண்ணின் மேல் போட்டு அவளை கொல்வது போன்ற வழக்கமான ப்ளாஷ்பேக் , பேயை விரட்ட வரும் சாமியார் என மாமூல்  பயணத்தில் தடுமாறுகிறது  ...

சந்திரமுகியில் சந்திராஷ்டம் என்றால் இதில் சூரிய கிரகணம் , ரஜினிக்கு பதில் சுந்தர்.சி , பிரபு - ஜோதிகா இடத்தில் வினய் - ஆண்டிரியா , வடிவேலுவுக்கு பதில் சந்தானம் , நயன்தாராவுக்கு பதில் ராய் லக்ஷ்மி என்று பார்க்கும் போதே நமக்கு தோன்றும் ஒப்பீடுகள் படத்தை சந்திரமுகி - 2 வோ என்று நினைக்கத் தோன்றுகின்றன . வழக்கமான  பார்முலா படங்களில் உள்ள எல்லா குறைகளும் இதில் இருந்தாலும் அதையும் மீறி படத்தை ரசிக்கும் படியாக தந்த விதத்திற்காக புதுசாக எதையும் எதிர்பார்த்து அலட்டிக் கொள்ளாமல் ஒரு முறை இந்த அரண்மனை யில் தங்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...