28 September 2014

மெட்ராஸ் - MADRAS - வசிக்கலாம் ...


முந்தைய படம் ஒடிவிட்டாலே அடுத்த படத்திற்கான பொறுப்பு இயக்குனருக்கும் , ஹீரோவுக்கும் கூடி விடுகிறது . அந்த வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் , ஹீரோ கார்த்தி இருவரும் மெட்ராஸ் படத்தில் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள் ...

வட சென்னை ஹவுசிங் போர்ட் ஏரியாவில் விளம்பர சுவரை கைப்பற்ற அடித்துக் கொள்ளும் இரண்டு அரசியல் கோஷ்டிகள் ,  ஒரு கோஷ்டியில் இருக்கும் அன்பு ( கலையரசன் ) , அவன் நண்பன் காளி ( கார்த்தி)
இருவரும் எதிர் கோஷ்டிக்கு கொடச்சலை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் . ஒரு கட்டத்தில் எதிர் கோஷ்டியின் தலைவன் கண்ணனின் மகன் இவர்களால் கொல்லப்பட அடுத்து என்ன நடக்கிறது என்பதை இண்டர்வெலுக்குப் பின் கொஞ்சம் தடுமாறினாலும் மாஸ் ஹீரோ கார்த்திக்காக எந்த காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல் க்ளாசாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ...

சென்னை ஸ்லாங் கொஞ்சம் இடித்தாலும் படித்த வடசென்னை வாலிபர் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாகவே இருக்கிறார் கார்த்தி . எதிர் கோஷ்டிகளுடன் மோதும் சண்டைகளோடு காதலியுடன் போடும் குட்டிச் சண்டைகளிலும் கவர்கிறார் . படித்து விட்டு வேலைக்கு போறவனுக்கு எதுக்கு சண்டை சச்சரவு என்று சுற்றியிருப்பவர்கள் தான் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்களே தவிர அதைப் பற்றி பார்ட்டி கொஞ்சம் கூட கவலைப்படாமல் தொகிறிக் கொண்டேயிருப்பது சறுக்கல் ...

தெலுங்கு வரவு கேத்தரின் பக்கத்து வீட்டுப் பெண் போல என்று வெறும் பேருக்கு சொல்வது போலல்லாமல் அயன் பண்ண சர்ட் போல அப்படியே இருக்கிறார் . இவரை பார்த்தவுடனே பிடிக்கவில்லை ஆனால் பார்க்க பார்க்க பிடிக்கிறது . அதிலும் கார்த்தியுடன் சண்டை போட்டுக்கொண்டே நீ தான் வேணும் என்று கொஞ்சுமிடத்தில் கூடுதல் அழகு . கார்த்தியின் நண்பனாக வரும் அன்பு , அவன் மனைவி மேரி இருவரும் படத்திற்கு பேக் போன்ஸ் . இவர்கள் இடையேயான காதல் முத்தக் காட்சிகள் கலீஜாக இல்லாமல் கேசுவலாக இருக்கின்றன . அன்புவின் மறைவுக்கு பிறகு படம் தடுமாறுவது நிஜம் . விஜி , பெருமாள்  , மாரி என்று வலம் வரும் அரை டஜன் கேரக்டர்களில் வாய்சில் புதுப்பேட்டை தனுஷை நியாபகப்படுத்தும் ஜானி லைக் அள்ளுகிறார் ...


படத்தின் மற்றொரு ஹீரோ பின்னணி இசையில் பின்னியெடுக்கும் சந்தோஷ் நாராயண் . மனுஷன் கானா வாகட்டும் , மெலடியாகட்டும் மிரட்டுகிறார் . இவர் தமிழ் இசையின் புது நம்பிக்கை . முரளியின் கேமரா ஹவுசிங் போர்ட் சந்து பொந்துகளுக்குள் புகுந்து விளையாடுகிறது . படத்தின் லைட்டிங் , பிரவீனின் எடிட்டிங் ரெண்டுமே சூப்பர் ...

அட்டக்கத்தி யில் தென்சென்னை புறநகர் வாசிகளை பதிய வைத்தது போலவே இதில் வடசென்னை வாசிகளை தனது நேர்த்தியான டீட்டைளிங்கில் மனதில் நங்கூரம் போட்டு உட்கார வைக்கிறார் ரஞ்சித் . படத்தோடு சேர்த்து சுவரையும் ஒரு கேரக்டர் போலவே உலவ விட்டிருப்பது நேர்த்தி . காதல் சீன்களை ஏதோ ஹீரோ சண்டை போட்டுவிட்டு வந்து வெறும் ரெஸ்ட் எடுப்பது மாதிரி தனி ட்ராக்காக வைக்காமல் படத்தோடு ஒன்றி வைத்திருப்பதை பாராட்டலாம் . அன்பு - காளி சம்பத்தப்பட்ட நட்புக்காட்சிகள் எல்லாமே நச் . சீன் இப்படித்தான் முடியும் என்று எதிர்பார்க்க விட்டு பிறகு எதிர்பார்க்காத நேரத்தில் வேறு மாதிரி முடித்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் ...

படத்தின் நீளம் , இரண்டாம் பாதியில் தடுமாறும் திரைக்கதை ,அரசியல் ஆதாயத்துக்காக காவு வாங்கப்படும் நண்பன் , அதற்காக ஆவேசப்படும் ஹீரோ என்ற நார்மல் ப்ளாட் போன்ற குறைகளையெல்லாம் தாண்டி படத்தின் கேரக்டர்களை பதிய வைத்த விதம் , படத்தை கொண்டு சென்ற பாங்கு இவற்றிக்காக சில இடங்களில் ஸ்லோவாக இருந்தாலும் ஸ்டெடியாக செல்லும் மெட்ராஸில் வசிக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 43 






1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

மதுரையில் சந்திப்போம்(மா?)...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...