13 September 2014

பர்மா - BURMA - பிட்ஸ் அண்ட் பீஸ் ...


சில லோ பட்ஜெட் படங்கள் ஏதோ ஒரு காரணத்தால் நம்மை கவனிக்க வைப்பதுண்டு . அந்த  வகையில் பர்மா படத்திற்காக இயக்குனர் தரணீதரன் எடுத்துக்கொண்ட கார் சீஸிங் ( கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தாதவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்வது ) என்கிற கதைக்களன் படத்தை பார்க்க வைத்தது . ஆனால் ஒரு படம் வெற்றி பெற வெறும் கதைக்களன் மட்டும் போதாது என்பதை நிரூபிக்கிறது பர்மா ...ஸி

கார் சீசிங் கிங் குணா ( சம்பத்ராஜ் ) விடம் வேலை செய்யும் பரமானந்தம் ( எ ) பர்மா ( மைக்கேல் ) உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாததால் குணா வை போலீசில் சிக்க வைத்து விட்டு அந்த இடத்திற்கு வருகிறான் . சேட்டுக்காக
( அதுல் குல்கர்னி ) சீஸ் செய்த கார்களில் ஒரு பி.எம்.டபிள்யூ மிஸ்ஸாக அதற்கு பதில் பர்மாவின் காதலியை ( ரேஷ்மி மேனன் ) சேட் பிடித்து வைத்துக் கொள்ள பர்மா காரை கொடுத்து காதலியை மீட்டானா என்கிற இந்த நீட்டான ஒன் லைனை வைத்துக் கொண்டு க்ரிப்பான திரைக்கதை அமைக்கத் தெரியாமல் தடுமாறியிருக்கிறார்கள் ...


கேரக்டருக்கு ஏற்ற தோற்றம்  இருந்தாலும் ஹீரோ மைக்கேல் கவரவில்லை . நிறைய இடங்களில் இவருடைய ரியாக்சன் மிஸ்ஸிங் . ஹீரோயின் ரேஷ்மி மேனன் ( கேரளத்திலிருந்து மற்றுமொரு புதுவரவு ) ஜம்மென்று இருக்கிறார் . ஹீரோவை கிஸ் அடிக்கும் போது ஹெராயின் போல போதை ஏற்றுகிறார் . சரியான வாய்ப்புகள் கிடைத்தால் ஒரு ரவுண்ட் வரலாம் . வா என்னைக் கடத்து என்பது போல கார் சீஸிங் செய்யும் இடத்திற்கெல்லாம் இவரும்  கூடவே அலைவது அபத்தம் . நல்ல திறமையிருந்தும் சரியான உயரத்தை தொடாதவர் சம்பத்ராஜ் . அவருக்கு இந்த படம் யானைப்பசிக்கு சோளப்பொறி . சேட் கேரக்டரில் அதுல் சரியான தேர்வு . யுவனின் ஒளிப்பதிவும் , சுதர்சன் எம்.குமாரின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் ...

நிறைய மெனக்கெடாமல் கார் சீஸிங் என்பதை கார் சீட்டிங் போல ஹீரோ வெறுமனே கள்ள சாவி போட்டு திறந்து கொண்டிருக்கிறார் . படத்திற்கு முக்கியமான உயிர்நாடியே இந்த விஷயம் தான் . அதில் இன்னும் சுவாரசியமாக டீட்டைலிங் செய்திருந்தால் படம் தேறியிருக்கும் . அதே போல பெண் தலைமையில் வரும் கடத்தல் குழுவும் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை . புது கதைக்களன் , ரசிக்க வைக்கும் வசனங்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பர்மா பிட்ஸ் அண்ட் பீஸ் களாக மட்டுமே கவர்கிறது ...

ஸ்கோர் கார்ட் : 39

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...