9 July 2015

அரையாண்டு தமிழ் சினிமா 2015 - TAMIL CINEMA 2015 HALF YEARLY REVIEW ...




ந்த வருடம் பயங்கர எதிர்பார்ப்போடு வந்த , மாசு , உத்தமவில்லன் என்று பெரிய ஹீரோக்களின் படங்கள் சொதப்ப தேசிய விருது பெற்ற காக்காமுட்டை , டார்லிங் , டிமாண்டி காலனி போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் பெற்றிருப்பது புது முயற்சிகளுக்கு என்றுமே தமிழ் ரசிகர்களின் ஆதரவு உண்டு என்பதை மீண்டும் நிரூபணம் செய்கிறது ...

ஐ படத்தில் பாடல் காட்சிகளை படமாக்குவதில் மெனக்கட்டதற்கு கால்வாசியாவது ஷங்கர் கதைக்கு பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். காஸ்ட்லி ஃபோனா இருந்தாலும் சிக்னலே வரலேன்னா எப்படி பாஸ் ? இருந்தாலும் பொங்கல் விடுமுறை தயாரிப்பாளருக்கு பொங்கலோ பொங்கல் சொல்லாமல் காப்பாற்றியிருக்கும் . Blessing in Disguise என்பது போல ஐ பட டிக்கெட் கிடைக்காமல் டார்லிங் போனவர்கள் டர் ஆகாவிட்டாலும் பேய் ட்ரெண்டில் மற்றுமொரு படத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள் . தனது அழுத்தமான விமர்சனங்களால் படிப்பவர்களின் மனதை தொடும் கேபிள் சங்கர் நல்ல கதையை தேர்ந்தெடுத்தும் தொட்டால் தொடரும் மூலம் கொடுத்ததென்னமோ மைல்ட்  டச் தான் . அடுத்த படத்தில் சிக்சர் அடிக்க வாழ்த்துக்கள் ...

காக்க காக்க , வேட்டையாடு விளையாடு படத்தின் ரீமேக் போல இருந்தாலும் ஐந்து கெட்டப்களில் அஜித்தை அவ்வளவு அழகாக காட்டியதற்கும் , ஸ்டைலிஷான மேக்கிங்குக்கும் பேசப்பட்டது என்னை அறிந்தால் . புதிய மொந்தையில் பழைய கள் தான் என்றாலும் ருசிக்கலாம் . தோல்விகளால் துவண்டிருந்த தனுஷுக்கு வி.ஐ.பி க்கு பிறகு மற்றுமொரு வெற்றிப்படம் அனேகன் . க்ரைம் நாவல் போன்ற கதைக்காகவும் , வேகமான திரைக்கதைக்காகவும் வென்றான் இந்த அனேகன் . தந்திரமான திரைக்கதையால் ராஜதந்திரம் அனைவரையும் கவனிக்க வைத்தது . பி சி சென்டர்களில் வசூலோடு சர்ச்சையையும் சேர்த்து கிளப்பியிருக்கிறது கார்த்திக் நடிப்பில் வந்த கொம்பன் . காக்கி சட்டையின் வெற்றி சிவகார்த்திகேயனை சக்சஸ் ஹீரோவாக மீண்டும் நிரூபித்திருக்கிறது ...

பேய் சீசனின் பேய் ஹிட் காஞ்சனா 2 . இரண்டாம் பாதி கொஞ்சம் மொக்கையாக இருந்தாலும் எல்லா சென்டர்களிலும் கல்லா கட்டியது காஞ்சனா . தனது படங்களில் வெரைட்டியை விரும்பும் அருள்நிதியை டிமாண்ட் நாயகனாக ஆக்கியிருக்கிறது டிமாண்டி காலனியின் வெற்றி . உலகநாயகனின் உத்தமவில்லன் இந்த அளவு சோதிப்பான் என்று யாரும் நினைக்கவில்லை . ஒரு நடிகனாக பிரமிக்க வைத்தாலும் கதை , திரைக்கதை ஆசிரியராக கமல் காலை வாரியது துரதிருஷடம் . ஐஸ்வர்யா தனுஷின் வை ராஜா வை ஏ சென்டர்களில் கை யை கடிக்காததாக கேள்வி . ஜனநாதனின் இயக்கத்தில் புறம்போக்கு மேம்போக்காக இருந்ததால் ரசிகர்களின் வரவேற்பை  பெறாவிட்டாலும் ஷாமின் நடிப்பு பாராட்டப்பட்டது ...

குரு எஸ்.ஜே சூர்யாவின் இசை சவுண்டாக வசூல் செய்யாவிட்டாலும் சிஷ்யன் லக்ஷ்மனின் ரோமியோ ஜூலியட் கமர்சியலாக ஜெயம் ரவிக்கு நல்ல ப்ரேக் கொடுத்திருக்கிறது . பல சர்வதேச விருதுகளோடு தேசிய விருதும் சேர்ந்து கொள்ள கிடப்பிலிருந்த காக்கா முட்டைக்கு டீசண்ட் ஓபனிங் கிடைத்தது . வன்முறை , சோகம் எதுவுமில்லாமல் மென்மையான படங்களாலும் அழுத்தமாக மனதை தொட முடியும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்த படம் . வெறும் விமர்சகர்களால் மட்டும் பாராட்டப்படாமல் படம் வசூலிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியம் ...

ஓ காதல் கண்மணி மூலம் ரசிகர்கள் , விமர்சகர்கள் இருவரிடமும் டபுள் ஓ.கே வாங்கி விட்டார் மணிரத்னம் . கணவர் சூர்யாவின் மாசுவை துடைக்கும் வகையில் ஜோதிகாவின் 36 வயதினிலே படம் நல்ல ஹிட் . குட் கம் பேக் . தரமான படங்களை தயாரித்து வரும் சி.வி.குமாரின் மற்றுமொரு நல்ல படைப்பு இன்று நேற்று நாளை . டைம் மிஷின் கான்செப்ட் பழசு தான் என்றாலும் தமிழுக்கு சொன்ன விதத்தில் புதுசு . இரண்டாம் அரையாண்டின் ஆரம்பத்திலேயே பாபநாசம் மூலம் உத்தம வில்லனின் பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார் உலகநாயகன் . விஜய் நடிப்பில் புலி , சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் பெயரிடப்படாத தல 56 இரண்டிற்காகவும் ரசிகர்கள் பசியுடன் காத்திருக்கிறார்கள் ...


1 comment:

Nagendra Bharathi said...

அருமை. ஜெயிப்பதற்கு கதையே நாயகன்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...