26 June 2016

அம்மா கணக்கு - AMMA KANAKKU - இன்னும் நல்லா படிச்சிருக்கலாம் ! ...


சின்ன பட்ஜெட்டில் தரமான கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து வரும்  தனுஷ் ஹிந்தியில் சமீபத்தில் ஹிட்டடித்த " நில் பேட்டி சன்னட்டா " வை அதே இயக்குனரை வைத்து அப்படியே ரீ மேக்கியிருப்பது தான் அம்மா கணக்கு . அவார்டுகளை அள்ளியதோடு வணிக  ரீதியாகவும் வெற்றி பெற்ற காக்காமுட்டை  , விசாரணை வரிசையில் இந்த படமும் இடம்பெறும் என்கிற தனுஷின் கணக்கு சாத்தியமாகுமா ? பார்க்கலாம் ...

எவ்வளவு  கஷ்டப்பட்டாலும் மகளை  பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டுமென்று கனவு காணும் சிங்கிள் மதர் சாந்தி ( அமலா பால் ) , பத்தாவது படித்தாலும் படிப்பை பற்றி எந்த கவலையும் படாமல் சினிமா பாட்டுக்கு குத்தாட்டம் போடும் டீன் ஏஜ் மகள் அபி ( யுவஸ்ரீ ) யை எப்படி மாற்றுகிறாள் என்பதே அம்மா கணக்கு ...

அழகான அமலா பாலை வீட்டு வேலைக்காரியாகவும் , 15 வயது மகளுக்கு அம்மாவாகவும் ஏற்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது . தன் மகளுக்காக அவர் படும் கஷ்டங்கள் உருக்கினாலும் கலெக்டர் எபிசோட் நாடகத்தனமாகவே படுகிறது .  டீன் ஏஜ் பெண்ணிற்கே உரிய குறும்பு , கோபம் இவற்றோடு யுவஸ்ரீ நல்ல தேர்வு . வீட்டில் அம்மா - மகள் இருவருக்குமிடையேயான உரையாடல்கள் யதார்த்தம் . ரேவதி - அமலா பால் இடையேயான சந்திப்புகள் ஒரே மாதிரி இருந்து போரடிப்பதை தவிர்த்திருக்கலாம் . தேசிய விருது க்கு பிறகு வித்தியாசமாக ஏதாவது பண்ண வேண்டுமென்று நினைத்த ! சமுத்திரக்கனி நடிப்பால் மேஜர் சுந்தர்ராஜனை நினைவுபடுத்துகிறார் ...


இசைஞானி தேவையான இடங்களில் மட்டும் பின்னணி இசையமைத்து கவர்கிறார் . ஆனால் ஒரே ஆர்.ஆரை வைத்து படம் முழுவதும் ஒப்பேற்றி ரசிகர்களை ஏமாற்றுகிறார் . மகளுக்காக அமலா பால் அவள் வகுப்பிலேயே சென்று படிப்பது புதுமையாக இருந்தாலும் ப்ராக்டிகலாக அது சாத்தியமா என்பதற்கான எந்த லாஜிக்கல் ஆன்சரும் இல்லாதது சறுக்கல் . மகள் அம்மாவை சந்தேகப்படுவது , பிறகு சக மாணவன் சொல்லி திருந்துவது , கடைசியில் ஒரு கண்ணாடியை போட்டுக்கொண்டு கலெக்டருக்கான நேர்முகத்தேர்வில் அமர்வது என படத்தில் நிறைய ஆஸ் யூஸுவல் சீன்கள் ...

ஆவரேஜ் ஸ்டூடண்ட்ஸோட அம்மாக்கள் எல்லாம் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தால் அரசு தாங்குமா ? இப்படி  சில கேள்விகள் மற்றும் குறைகளால் பசங்க , ஹரிதாஸ் அளவுக்கு படம் நம்மை கவராமல் போனாலும்  பெண் கல்வி யை வலியுறுத்தும் வகையில் படத்தை எடுத்திருக்கும் பெண் இயக்குனர் அஸ்வினி அய்யர் திவாரியை நிச்சயம் அப்ரிசியேட் செய்வது நம் கடமை  . பள்ளிப் பருவத்தின் முக்கிய கட்டத்தில் படிப்பை பற்றிய அக்கறையில்லாமல் ஜாலியாக சுற்றும் மாணவர்களும் , அவர்களை திருத்த கஷ்டப்படும் பெற்றோர்களும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் . மொத்தத்தில் கதைக்கரு  கவர்ந்த அளவிற்கு படத்தின் மேக்கிங் கவராததால் கணக்கை இன்னும் நல்லா படித்திருக்கலாமோ என்றே தோன்றுகிறது ... 


ரேட்டிங் : 2.75 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 42 No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...