5 June 2016

இறைவி - IRAIVI - வணங்கலாம் ...


ள்ளிரவில் ஒரு இளம்பெண் நிறைய நகைகள் அணிந்து வீதியில் தனியாக என்று செல்ல முடிகிறதோ அன்றே இந்தியாவிற்கு முழு சுதந்திரம் அடைந்ததாய் ஒத்துக்கொள்வேன் என்றார் மகாத்மா . ஆனால் இன்றும் ஆணாதிக்க சமுதாயத்தில் பட்டப்பகலில் ஒரு பெண் தனது வீட்டில் கூட நிம்மதியாக இருக்க முடியாத சூழலில் தான் நாம் இருக்கிறோம் . ஆண்கள் உலகத்தில் பெண்கள் ஒரு பகுதி ஆனால் அவர்களுக்கு ஆண்கள் தான் உலகமே . இப்படி தனது சுயநலம் , ஈகோ இவற்றால் தன்னை  நம்பி வந்த இறைவிகளை கைவிட்ட இரண்டு இறைவைன்களை பற்றிய கதையே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வந்திருக்கும் இறைவி ...

தயாரிப்பாளருடனான தகராறால் தன்  படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் பிரபல இயக்குனர் அருள் ( எஸ்.ஜே.சூர்யா ) , ரிலீசுக்கு தேவைப்படும் பணத்துக்காக தனது மூதாதையர் செய்த பூர்வீக சிலைகளை திருடும் அவர் தம்பி ஜகன் ( பாபி சிம்ஹா ) , அவர்களுடைய பால்ய நண்பன் மைக்கேல்
 ( விஜய் சேதுபதி ) , எஸ்.ஜே.எஸ் சுக்கு மனைவியாக கமாலினி முகர்ஜி , விஜய் சேதுபதியின் மனைவியாக அஞ்சலி இந்த ஐவரோடு சேர்த்து நம்மையும் சிரிக்க , கவலைப்பட , சிந்திக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ...

இயக்குனராக சம்பாதித்த பெயரை முழு நேர நடிகரான பிறகு செலவு செய்தவர் எஸ்.ஜே.சூர்யா . ஆனால் அவருக்குள் இருக்கும் நடிப்புப்பசிக்கு நிச்சயம் நல்ல தீனி இந்த படம் . நல்ல கலைஞனுக்கே உண்டான கர்வம் , படத்தை வெளியிட முடியாத விரக்தி , காதல் மனைவி பிரிந்த சோகம் என எல்லாவற்றையும் இயக்குனராக இருப்பதாலோ என்னவோ  மனுஷன் நம் கண் முன்னே நிறுத்துகிறார் . இவரிடம் இந்த அளவு வேலை வாங்கியதுக்காகவே கார்த்திக் சுப்பராஜுக்கு ஒரு சல்யூட் . இறைவி க்குப் பிறகு எஸ்.ஜே.எஸ் வழக்கம் போல வியாபாரி , திருமகன் வகையறா படங்களுக்கு திரும்பி விடாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பது உத்தமம் ...


சோலோ ஹீரோவான பிறகும் இது போன்ற கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி க்கு வாழ்த்துக்கள் . குடும்பத்தை பற்றி யோச்கிக்காமல் ஒரு நிமிட உணர்ச்சிவயத்தில் குற்றம் புரிந்து விட்டு உள்ளே போன பல இளைஞர்களை நடிப்பால் நினைவு படுத்துகிறார் . நீண்ட இடைவெளிக்கு பிறகு அஞ்சலிக்கு பேர் சொல்லும் ஒரு படம் . " என்ன அவன் கூட படுத்தேனான்னு கேக்குறியா " என்று ஆவேசப்படும் இடத்தில் தனது அலட்டிக் கொள்ளாத நடிப்பால் மார்க் அள்ளுகிறார் அஞ்சலி  . என்ன தான் போல்டாக இருந்தாலும் கடைசியில் கணவனுக்குள் கட்டுப்படுவது யதார்த்தம் ...

அப்பா உட்பட யாருமே பெண்களை ஒழுங்காக நடத்தவில்லை என்று ஆதங்கப்படும் பாபி சிம்ஹா வை இது போன்ற சப்போர்டிங் காஸ்டிங்கில் பார்ப்பது ஆறுதல் . வாயால் பேச வேண்டிய வசனங்களை கமாலினி யின் கண்களே பேசி விடுகிறது . விஜய் சேதுபதியின் நண்பி ?! மலராக வரும் பூஜா போல்ட் அண்ட் பியூடிபுள் . Blessing in Disguise என்று சொல்வார்கள் . அது  நடிகர் சங்க பதவியை இழந்ததிலிருந்து நல்ல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ராதாரவிக்கு பொருந்தும் . சந்தோஷ் நாராயணின் பி.ஜி.எம் படத்துக்கு உயிர் கொடுக்கிறது . " கண்ணை காட்டி " பாடல் நன்றாக இருந்தாலும் யதார்த்தமான படத்துக்கு கொஞ்சம் ஆர்டிபீசியலாக படுகிறது ...


முக்கிய கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு `இரண்டரை மணி நேரத்துக்கு மேல் படத்தை போரடிக்காமல் கொண்டு சென்ற விதம் , சின்ன சின்ன ட்விஸ்டுடன் கூடிய திரைக்கதை , சிம்பிள் பட் சார்ப்பான வசனங்கள் , இயல்பாக நடிக்கும் நடிகர்கள் , வசனங்களாக மட்டுமில்லாமல் காட்சிகளாக விரியும் சிம்பாலிக் ஷாட்கள் , மனித உணர்வுகளை கசிக்கிப் பிழியாமல் மேம்போக்காக அதே சமயம் அழுத்தமாகவும் பதியும் விதத்தில் சொன்ன ஸ்டைல் இவற்றால் இறைவி சாதாரண படங்களிலிருந்து தனித்து மேலே நிற்கிறாள் ...

புதுசு என்று புகழ முடியாத கதை ,  குறிப்பிட்ட ஆடியன்சை டார்க்கெட் செய்து எடுக்கப்பட்டது போன்ற படம் , இயக்குனரின் முந்தைய படங்களை நினைவு படுத்தும் சில சீன்கள் , இறைவி என்று டைட்டில் வைத்து விட்டு பெண்களின் பலத்தை காட்டாமல் ஆண்களின் பலவீனத்தை மட்டும் காட்டிய விதம் இவையெல்லாம் இறைவியை ஒருபடி இறக்குகின்றன  . டைட்டில் கார்டில் கே.பி , பாலு மகேந்திரா , சுஜாதா ஆகியோருக்கு நன்றி தெரிவித்த இயக்குனரின் நேர்மைக்கு பாராட்டுகள் . அதே போல மணிரத்னம் , செல்வராகவன் இருவரின் பெயரையும் சேர்த்திருக்கலாமோ என்றே தோன்றுகிறது . வணிக ரீதியான வெற்றியை மட்டும் கணக்கில் வைத்து ஒரே மாதிரியான படங்களை எடுக்காமல் புதுப்புது ட்ராக்கில் பயணிக்கும் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் வந்திருக்கும் இறைவியை இறுக்கமாக நம்மை ஒன்ற செய்த விதத்துக்காக வணங்கலாம் ...

ரேட்டிங்      : 3.25 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 44

1 comment:

Siva said...

அருமையான விமர்சனம்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...