26 August 2017

விவேகம் - VIVEGAM - விழலுக்கு இறைத்த நீர் ...


ரம்பிப்பதற்கு முன்  ஒன்றை சொல்லிக்கொள்ள வேண்டும் . முதலில் நான் நல்ல சினிமாவிற்கு ரசிகன் , பிறகு தான் ஹீரோ . அது கமல் , ரஜினி , அஜித் , தனுஷ் என்று யாராக இருந்தாலும் பொருந்தும் . என்னைப் பொறுத்தவரை நல்ல ரசிகன் என்பவன் நியாயமான விமர்சகனாக இருக்க வேண்டும் . அது தான் நேசிக்கிற ஹீரோவிற்கு அவன்  செய்யும் சிறந்த சேவை . மற்றபடி கண்மூடித்தனமாக விசில் மட்டும் அடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு சாரி , இது இடமல்ல ...

கோலிவுட்டின் ஸ்டைலிஷ் அண்ட் மரண மாஸ் ஹீரோ அஜித்தை ஹாலிவுட் ரேஞ்சுக்கு சிறுத்தை சிவா தூக்கிப் பிடித்திருப்பதே விவேகம் . பல நாடுகளால் தேடப்படும் ஹேக்கர் நடாஷா ( அக்சரா ஹாசன் ) வை பிடிக்கும் பணி இன்டர்நேஷனல் லீட் ஏஜென்ட் ஏ.கே ( அஜித்  குமார் ) விடம் ஒப்படைக்கப்படுகிறது . அதை நிறைவேற்றும் ஏ.கேவுக்கு நடாஷா ஒரு அப்பாவி என்பது தெரிய வர அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை வேகமாக ஆனால் விவேகத்தை விட்டு விட்டு சொல்வதே விவேகம் ...

இப்போதிருக்கும் ஹீரோக்களில் ஜேம்ஸ் பாண்ட் வகையறா கதைகளில் நடிக்கும் தகுதியுள்ள ஒரே ஹீரோ அஜித் மட்டுமே . இந்த ரோலுக்காக அவர் நிறையவே மெனெக்கட்டிருப்பது நன்றாக தெரிகிறது . ஸ்டண்ட் காட்சிகளில் குறிப்பாக பைக் சேசிங் சீனில் சிலிர்க்க வைக்கிறார் . " உலகமே உன்னை எதிர்த்தாலும் " , " வெற்றிக்கு முன்னாடியே அத ஃபேஸ்புக் ல கொண்டாடுற பழக்கம் எனக்கு இல்ல " போன்ற வசனங்களில் தியேட்டர் அதிர் கிறது .  ஆனா என்ன அஜித் படம் நெடுக டயர்ட் ஏ ஆகாமல் சுடுகிறார் , சுடுகிறார் , சுட்டுக்கொணடே இருக்கிறார் . ஆனா பாக்குற நாம தான் டயர்ட் ஆயிடுறோம்...


சும்மா மரத்தை சுற்றும் ஹீரோயினாக இல்லாமல்  ஏ.கே வின் மனைவி யாழினியாக காஜல் அகர்வாலுக்கு நல்ல சென்டிமென்டல் ரோல் . 
க்ளைமேக்சில் இவர் பாடுவது கொஞ்சம் ஓவராக  இருந்தாலும் நிறைய  சென்டிமென்டை பிழியாமல் அடக்கியே வாசித்திருப்பது சுகம் . விவேக் ஓபராய்க்கு தமிழில் இது நல்ல மாஸ் அறிமுகம் . ஆ ஊ என்று கத்தும்  வில்லன்களுக்கு மத்தியில் ஸ்மைலி யோடே இருக்கும் விவேக் ஆறுதல் . ஆனால் படம் முழுக்க இவர் அஜித் புகழ் பாடிக்கொண்டேயிருப்பது அல்லக்கை இல்லாத குறையை தீர்க்கிறது . இதற்கு அவர் முதல் சீனிலேயே அடி  வாங்கி செத்துப் போயிருக்கலாம்  . எம்.ஜி.ஆர் , ரஜினி இவர்கள் கொடி  கட்டிப் பறந்ததற்கு நம்பியார் , ரகுவரன் போன்றோரும் காரணம் என்பதை இன்றைய இயக்குனர்கள் எப்போது புரிந்து கொள்ளப்போகிறார்களோ !!!

அக்சரா வுக்கு ஷார்ட்டாக இருந்தாலும் ஸ்வீட் ரோல் . படத்தின் ஆக்சன் அடிகளுக்கு  நடுவே கருணாகரன் ஒரு நல்ல வலி நிவாரணி . அனிருத்தின் இசை சும்மாவே அதிரும் இதில் குண்டு சத்தங்களுக்கிடையே அதுவே அமுங்கி விடுகிறது . பி.ஜி.எம் போட்ட இவருக்கும் , எடிட்டருக்கும் தனியே சுத்திப்  போட வேண்டும் . ரெண்டரை மணி நேரத்துக்கு நமக்கே தலை சுத்துதுன்னா பாவம் அவுங்க நிலைமையை நெனைச்சுப் பாருங்க மக்களே ...

வீரத்துல வெள்ளையும் சொள்ளையுமா வந்து கிராமத்துல நாலு பேர  அடிக்க விட்டாச்சு , வேதாளத்துல சிட்டி ரவுடியா வந்து பொளந்து கட்ட வச்சாச்சு , அடுத்து அவரை இன்டர்நேஷனல் லெவெள்ல கொண்டு போகணும்னு நினைச்ச சிவா அதற்கான கதையும் கெடைச்சாச்சு , செலவு பண்ண ப்ரொட்யூசர் இருக்கார் , தொழில்நுட்பம் இருக்கு வேறென்ன வேணும்னு நெனைச்சு இறங்கிட்டார் போல .  இது எல்லாத்துக்கும் மேல பாக்குறவங்கள கனெக்ட் பண்ற மாதிரி திரைக்கதை யும் , ஓரளவு நம்புற  மாதிரி யாவது சீன்களும் இருக்கணும்ன்றத அவர் சாய்ஸ் ல விட்டது தான் பிரச்சனை ...

ஓப்பனிங் சீன்லயே மூணு அடுக்கு பாதுகாப்பு னு பில்ட் அப் கொடுத்த ஏரியாவுக்குள்ள ஏதோ முருகன் கோவிலுக்குள்ளே கூட்டத்தை தள்ளி விட்டுட்டு முன்னாடி வரது மாதிரி அஜித் வரும் போதே நமக்கு பக்குன்னு இருக்கு . ஓகே நம்ம தல தானே பொறுத்துக்கிட்டா அடுத்த சீன ப்ப்ப்ப்பா . ப்ரிட்ஜுக்கு ரெண்டு பக்கமும் இவரை குறி பாத்துக்குட்டு 40 பேர் லேட்டஸ்ட் துப்பாக்கியோடு நிக்குறாங்க , இது பத்தாதுன்னு மேலே வேற நாலு ஹெலிகாப்டர் சுத்துக்கிட்டு இருக்கு . இதுல இருந்து லாம் நிச்சயம் தல தப்பிப்பார்னு குழந்தைக்கும் தெரியும் . ஆனா எப்படி தப்பிப்பார்னு சுவாரசியமா சொல்றது இயக்குனர் கையில இருக்கு . ஆனா தல " உலகமே உன்ன எதிர்த்தாலும் " னு தனியா பத்து நிமிஷம் பேசுறாப்ல அந்த பன்னாடைகளும் சுடாம  குறி வச்சுக்கிட்டே இருக்கானுங்க . அங்க தான் கதைல ட்விஸ்ட் , தல டைவ் அடிச்சு பேக் ல குதிக்குறாப்ல . ஆக்சுவலி இதோட அவர் தப்பிக்குற மாதிரி வச்சிருந்தா படமும் தப்பிச்சிருக்கும் . ஆனா டைவ் அடிச்சுக்குட்டே அவர் சுடறதுல ஹெலிகாப்டர் வெடிக்கறதும் இவர் தண்ணிக்குள்ள போய் தப்பிக்கறதும் சத்தியமா தாங்க முடியல ...


கமர்சியல் படம்னா லாஜிக் லாம் பாக்கக்கூடாது தான் , ஆனாலும்  சதுரங்க வேட்டை படத்துல  சொல்ற மாதிரி எல்லா பொய்க்கு நடுவுலயும் கொஞ்சமாவது உண்மை கலந்து இருக்கணும் . அப்படி இல்லேன்னா அது நிக்காது . ஒரு மாஸ் ஹீரோவுக்கான அப்நார்மல் ஒபெநிங்க் ஸீன் னு நெனைச்சு அத கூட மறந்துடலாம் .  ஒரு படத்தல சண்டை இருக்கலாம் , ஆனா படம் முழுக்க சண்டையாவே இருந்தா எப்படி பாஸ் . எல்லோருக்கும் தெரியும் ஹீரோ தான் ஜெயிப்பான்னு . ஆனாலும் வில்லன் வைக்குற செக் ல இருந்து ஹீரோ எப்படி தப்பிக்கிறான் னு காட்டுறதுல தான் கிக் கே . இதுல நண்பா நண்பா னு விவேக் பேசுறதும் , நட்ப பத்தி தல சொல்றதும் ஒரு லெவெலுக்கு மேல நாம சசிகுமார் படத்துக்கு வந்துட்டோமான்னு நமக்கே பெரிய டவுட் வந்துருது . அத்துவான காட்டுக்குள்ள ஆ ன்னு கத்திகிட்டே 
எக்ஸர்ஸைஸ்  பண்ணா ஆச்சா ? சோறு தண்ணி வேணாம் . என்னமோ போங்கப்பா ...

படத்துல பாசிட்டிவ் னு பார்த்தா மேக்கிங் , லொகேஷன் எல்லாமே வேற லெவல் . ஆக்சன் சீன்ஸும் ரொம்ப சிரமப்பட்டு பண்ணிருக்காங்க . படம் முழுக்க தல , தல , தல தான் . ரத்தம் , சதை , நாடி நரம்பெல்லாம் தல ரசிகன் ன்ற வெறி ரத்தமா ஓடுறவங்களுக்கு படம் பக்கா ட்ரீட் . காஜல் அகர்வாலை வில்லன் க்ரூப்ல இருந்து காப்பாத்திட்டு ஏ.கே னு செவுத்துல துளை போட்டு காட்டுறது , கேங்ஸ்டர் கூட்டத்துக்கு நடுவுல சிங்கிள் ஆளா போய் மாஸ் காட்டுறது , பைக் ல பறந்து பறந்து அக்சரா வ காப்பாத்துறது எல்லாமே தமிழ் சினிமா ஆக்ஸன் சீன்களுக்கு ஒரு மைல்கல் . படம் முடிஞ்சு  வந்தும் யாராவது ஒளிஞ்சுக்கிட்டு  சுடுறாங்களோ ன்னு பாக்குற அளவுக்கு படம் 
ஓவர்டோஸா போனது தான் ப்ராப்ளம் . மாஸ் ஹீரோ , பிரம்மாண்டம் , தொழில் நுட்பம் இது எல்லாம் இருந்தும்  படம் பாக்குறவங்கள என்கேஜ் பண்ண தவறியதால் விவேகம் விழலுக்கு இறைத்த நீர் ...

ரேட்டிங் : 2.5 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 40No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...