20 August 2017

தரமணி - TARAMANI - தரமாக இருந்திருக்கும் ...


ரமணி படத்தைப் பற்றி நேர்மறையாகவோ , எதிர்மறையாகவோ விமர்சனங்கள் வந்துகொண்டே தானிருக்கின்றன . அனைவரையும் கவனிக்க வைத்த விதத்தில் படம் வெற்றியே . எதிர்பார்த்த விஐபி 2 வும் ஊத்திக்கொண்டதால் ஷோக்களின் எண்ணிக்கையை கூட்டியிருக்கிறார்கள் . படம் பார்த்தே ஆக வேண்டிய படமா ? இல்லை படு திராவையா ? பார்க்கலாம்...

ஆல்தியா ( ஆண்ட்ரியா ) கார்ப்பரேட் டில் 80K சம்பளம் வாங்கும் அல்டரா மாடர்ன் சிங்கிள் மதர் . ஒரு நாள் மழைக்காக ஒதுங்கும் போது காதல் தோல்வியில் தாடியுடன் திரியும் பிரபுநாத்தை ( வசந்த் ரவி ) யை சந்திக்கிறார்.
மழை முடிவதற்குள் தன் காதல்  கதையை சொல்லி முடிக்கிறார் பிரபு . பின் சினேகமாகும் இருவரும் அடுத்த கட்ட உறவுக்குள் இருவரும் போகும் போது எவ்விதமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை போல்டாக அதே சமயம் படம் நெடுக இயக்குனர் ராம் வாய்ஸ் ஓவரில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசி பேசி யே கொஞ்சம் போராகவும் சொல்வதே தரமணி ...

ஆண்ட்ரியா வின் அழகுக்கு மட்டுமல்ல நடிப்புக்கும் தீனி போடும் படம் . மிக இயல்பாக இந்த கேரக்டருக்குள் பொருந்துகிறார் . " உனக்கு சிக்ரெட் பிடிக்க தெரியல " என்று பிரபுவை கலாய்ப்பதாகட்டும் , ப்ரைவேட் ஃபோட்டோவை பேஸ்புக் கில் அப்லோட் செய்து பாஸை கதற விடுவதாகட்டும் , " வெளிய போடா நாயே " என்று பிரபுவை வீட்டை விட்டு அடித்து தொறத்துவதாகாட்டும் நிச்சயம் ஆண்ட்ரியா வை மறக்கடித்து தியா வாக மட்டுமே அவர் வாழ்ந்திருக்கிறார் . திரும்பவும் வெறும் கிளாமர் ரூட்டுக்குள் போகாமல் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அவர் நடிக்கவும் , அதற்கு வாய்ப்பு கிடைக்கவும் வாழ்த்துக்கள் .  நிறைய வருடங்கள் கழித்து நிறைவான பெண் கதாபாத்திரத்தை கொடுத்த ராமுக்கு பாராட்டுகள்   ...


முதல் படத்திலேயே விக்ரம் ரவிக்கு செம்ம ரோல் . ஆள் தோற்றத்தில் தெலுகு நடிகர் சக்ரவர்த்தியையும் , நடிப்பில் கொஞ்சம் ரகுவரனையும் நியாபகப்படுத்தினாலும் தனித்துவம் தெரிகிறது . நட்பாக இருந்து காதலனாக மாறியவுடன் " அவன் ஏன் உன் போட்டோவுக்கு லைக் போட்டான் " , " ஏன் உன் பாஸ் கட்டிப்பிடிக்கிறான் " என்று ஆண்ட்ரியாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு நமக்கே  எரிச்சலை கொடுத்த  விதத்தில் நடிப்பில் ஸ்கோர் செயகிறார். ஆல் தி பெஸ்ட் ...

இரண்டு முக்கிய கேரக்டர்களுக்கிடையே சுழலும் படத்தில் அழகம் பெருமாள் அமைதியான  நடிப்பால் அழுத்தத்தை கொடுக்கிறார் . அவர் தன் மனைவியை பற்றி பிரபு விடம் சொல்லுமிடம் க்ளாஸ் . போலீஸ் கணவனால் பாதிக்கப்பட்ட பெண்ணாக வரும் ஆண்ட்ரியன் ரோல் படத்தின் மெயின் பிளாட்டில் இருந்து விலகுவது போல் பட்டாலும் அவரது நடிப்பும் , அதை மையமாக வைத்து ஹீரோ மனம் மாறுவதும் சிறப்பு . ஆண்ட்ரியாவிடம் ஜொள் விடும் போதும் சரி , காலில் விழும் போதும் சரி பாஸாக நடித்திருப்பவர் அட போட வைக்கிறார் ...

திருமணமான சில மாதங்களிலேயே கணவன் கேய் ( GAY ) என்று தெரிந்ததும் அவனை அசிங்கப்படுத்தாமல் ஆதரவாக பேசிவிட்டு பையனுடன் பிரிந்து வரும் ஆண்ட்ரியா , மூன்று லட்சம் கொடுத்து அமெரிக்கா அனுப்பி வைத்த காதலி ( அஞ்சலி ) ஆன்சைட்டிலேயே வேறொரு ஆண்மகனுடன் செட்டில் ஆனதால் விரக்தியுடன் சுற்றும் விக்ரம் ரவி இருவரும் வேறு வேறு துருவங்களாக இருந்தாலும் அவர்கள் பேசிக்கொள்ளும் ஆரம்பக்காட்சிகள் அவ்வளவு இயல்பு . மினி ஸ்கர்ட் போடுறவ  எல்லாம் மோசமானவளும் இல்ல , இழுத்துப் போத்தினவளெல்லாம் பத்தினியுமில்ல என்பதை பொட்டில் அடித்தாற்போல சொல்கிறார் இயக்குனர் ...


பப் , பாய் ஃப்ரெண்ட் என்று ஜாலியாக சுற்றும் ஐடி ஆட்களுக்கு சட்டென்று வேலை போகும் அபாயத்தையும் ராம் காட்டத் தவறவில்லை . சமூகத்தில் தனியாக வாழும் பெண்ணை ஆண்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை அட்வைஸாக இல்லாமல் இயலபாக காட்டிய விதத்தில் ஜெயிக்கிறார் இயக்குனர் . காதல் ஏற ஏற சப்ளிமெண்டாக சந்தேகமும் ஏறுவதை சில சீன்களில் நச்சென்று காட்டிய விதம் அருமை . " அவன் கூட படுக்கணுமா இல்லையான்றத நான் தான் முடிவு பண்ணனும் " , " உன் சைஸ் அவனுக்கு எப்படிடி தெரியும் " போன்ற வசனங்கள் படு ஷார்ப் . யுவனின் பிண்ணனி  இசையும் , மறைந்த முத்துக்குமாருடன் இணைந்து கொடுத்திருக்கும் பாடல்களும் பெரிய பலம் ...

ஆண் , பெண் உறவுகளை தைரியமாக சொல்வதென்று முடிவெடுத்த இயக்குனர் சிகரெட் , தண்ணி என்று பெண்களும் அடாவடியாக எதையாவது செய்வது மட்டும் தான் முற்போக்கு என்பது போல காட்டுவதும்   , லீட் கேரக்டரை ஆங்கிலோ இந்தியனாக காட்டி சேஃப்  கேம் ஆடியிருப்பதும் சறுக்கல் . பொதுவாக தான் சொல்வதை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களோ என சந்தேகிப்பவர்கள் நிறைய வாய்ஸ் ஓவர் வைப்பார்கள் . ஆனால் இதில் ராம் தமிழ் மீனவர்கள் பிரச்சனை , ஏரிகளை ஆக்ரமித்து கட்டப்படும் கட்டிடங்கள் , அல்லாடும் பீஹார் தொழிலாளிகள் ,டீமானிட்டைசேஷன் என்று படத்தோடு  நேரடி தொடர்பில்லாத பல விஷயங்களை நடு நடுவே பேசி பேசி நம்மை சாவடிக்கிறார்  . கமல் சில நல்ல படங்களுக்கு நடுவே தன் நாத்தீக கருத்தை புகுத்தி நாசம் செய்வதை போல ராமும் செய்திருப்பது கொடுமை . ராம் நடுவே பேசுவது இங்கிலீஷில் பேசி அதற்கு தமிழ் விளக்கம் கொடுக்கும் மேஜரை நினைவுபடுத்துகிறது ...

அந்த காலத்தில் டீச்சர் கேரக்டர் என்றால் கொண்டை , குடை இருக்கும் . வில்லனுடைய கேர்ள் ஃப்ரெண்டுக்கு பெயர் ரீட்டா என்றிருக்கும் . அதே போல இப்போதெல்லாம் ஐடி யில் வேலை செய்ப்பவர்கள் எல்லாமே ஏதோ பப்பில் தவம் கிடப்பது போல காட்டுவது வழக்கமாகி விட்டது . அதையே ராமும் பின்பற்றியிருக்கிறார் .  ஏமாற்றிய காதலி அஞ்சலி திருமண வாழ்வில் தோற்று திரும்ப  வருவது , அவ்வளவு அசிங்கப்படுத்தியும் கடைசியில் ஆண்டிரியா விக்ரமை ஏற்றுக்கொள்வது , சும்மா சாட் செய்தாலே குடும்ப பெண்களை  கரெக்ட் செய்து விடலாம் என்பது போல காட்டி அவர்களை கொச்சைப்படுத்துவது இதெல்லாம்  என்ன தான் பெண் சுதந்திரம் பேசினாலும் இயக்குனருக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கத்தை காட்டுகிறது . இண்டெர்வெல் வரை பக்காவாக செல்லும் படம் பிறகு தடம் மாறுகிறது . ராமின் பேச்சை போலவே படமும் அலைபாயாமல் ஆண் - பெண் உறவு என்கிற நேர்கோட்டில் மட்டும் பயணித்திருந்தால் தரமணி இன்னும் தரமாக இருந்திருக்கும் . ஆனால் நீண்ட காலம் கழித்து  இவ்வளவு பெரிய விமர்சனம் எழுதியதிலிருந்தே படம் எந்த அளவு பாதித்திருக்கிறது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை ...

ரேட்டிங் : 3.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 45

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...