23 August 2019

அவன் - அவள் - நிலா (1) ...


ருக்கு பிரயாணம் செய்வது எப்பொழுதுமே ஒரு படபடப்பை கொடுக்கிறது , பரீட்சைக்கு போகும் மாணவனைப் போல , பெண் பார்க்க வரும் போது  வீட்டார் பரபரப்பதை போல . அதிலும் நீண்ட நாட்கள் கழித்து சில சொந்தங்களை பார்ப்பதென்பது படபடப்புடன் கூடிய பரவசம் தான் . கல்யாணத்திற்கான பத்திரிக்கை வந்தவுடனேயே திருச்சி செல்வதென அவன் முடிவெடுத்து விட்டான் . திருச்சி என்றுமே அவனுக்கு மறக்க முடியாத ஊர் . பெண்ணின் முதல் அறிமுகம் கிடைத்த ஊர் , முதன் முதலாக ஒரு பெண்ணோடு கைகளை பிடித்துக்கொண்டு கடை வீதிகளில் சுற்றிய ஊர் , சீக்கிரமே மலைக்கோயில் வந்துவிட்டதேயென அங்கலாய்த்த ஊர் . அவன் அந்த ஊருக்கு பல வருடங்கள் கழித்து திரும்ப போவதற்கு அவள் முக்கிய காரணம் ...

ரயில் பயணம் சவுகரியமாக இருந்தாலும் , பேருந்தே அவனுக்கு பிடித்திருந்தது , அருகில் அமர்பவர் சத்தமாக குறட்டை விடும் சில சமயங்களை தவிர . நல்ல வேலை அன்று டிவிடி பிரச்சனையோ என்னவோ படம் எதுவும் பேருந்தில் போடவில்லை , மாறாக இசைஞானி பாடல்களை போட்டார்கள் . சில சுமாரான பேருந்து பிரயாணங்களை கூட பரவசமாக்கும் வித்தை அவர் இசையில் இருக்கிறது . ஐ பேடிலோ , மொபைலிலோ பதிந்து வைத்திருக்கும் பாடல்களை கேட்பதை விட சர்ப்ரைஸாக வரும் பாடல்கள் மிக்க ஆனந்தத்தை தருகின்றன . " சுந்தரி கண்ணால் ஒரு சேதி " பாடல் எஸ்பிபி - ஜானகி வாய்ஸில் கேட்கும் போதே அவன் மனது ரிவர்ஸ் கியரில் ஓடியது ...

" எக்ஸ்கியூஸ் மீ " இனிமையாவும் இல்லாமல் , கடுமையாகவும் இல்லாமல் ஒரு குரல் , ஆனால் அதில் ஒரு வசீகரம் இருந்தது . " சித்த அந்த டம்ளர் எடுத்து தர முடியுமா " அவள் கேட்ட போது டம்ளரை எடுத்து தந்தான் . சில நிமிடங்கள் அவளை பார்த்த பிறகு எதை வேண்டுமானாலும் அவளுக்கு எடுத்து தரலாம் போல இருந்தது . நிச்சயம் அவள் கேரளவாகவோ இல்லை கேரளா பார்டராகவோ யிருக்க வேண்டுமென நினைத்தான் . அடர்ந்த கறுத்த  கூந்தல் , உருண்டை முகம் , மையேறின புருவம் , வயதுக்கு மீறிய நிமிர்ந்த மார்பகம் , அதுவும் பாவாடை சட்டைக்குள் பாந்தமாக இருந்தது . கலர் குறைவாக இருந்தாலும் வருஷம் 16 குஷ்பூவை நினைவு படுத்தும் ரவுண்டு முகம். பத்தாவது இல்லை பதினொன்று படிக்கலாம் எப்படி இருந்தாலும் அவனை விட சில வயது சின்னவளாக தான் இருப்பாள் என யூகித்தான் .
" நீங்க பொண்ணு சைடா " ,  " இல்ல ரெண்டு சைடும்  , அதான் மாப்பிள்ளை அழைப்பே நடக்கப் போறதே "  சொல்லிவிட்டு அவள் சிரித்த நக்கல் சிரிப்பு ஏதோ செய்தது . " ஜோக்கடிக்கறாங்கலாமாம் " சொன்ன சிவாவின் கையை வேகமாக கிள்ளினான் ...

" நீங்க மாப்பிள்ளை அழைப்புல இருப்பீங்களா ?" , " கண்டிப்பா , இல்லேன்னா
அக்கா கொன்னுருவா " , " அவங்களும் வந்துருக்காங்களா ? "
" ஐயோ அவ தான் மணப்பொண்ணே " , " அப்போ உங்க ரூட்டு கிளியர் " ,
நான் முறைப்பது தெரிந்தவுடன் நைசாக பார்வையை திருப்பிக்கொண்டான் சிவா . " சார் யார் ப்ரோக்கரா ? ரூட் கிளியர்னா உடனே மாப்பிள்ளை பார்த்து கொடுத்துடுவாரோ ?" அவள் சொன்னவுடன் சிவா  லேசாக அசடு வழிய அவனுக்கு  சிரிப்பு வந்தது . சரியான பெண் கவுண்ட மணியாக இருப்பாள் போலயே என தோன்றியது . தம்மடிக்க கடைக்கு போக நினைத்திருந்தவனுக்கு அது மறந்தே விட்டது . சரியாக சிவாவும் கையை பிடித்து அழுத்தினான் . " உங்க ஃபிரென்ட் எங்கயோ கூப்புடுறார் போலயே " ,
அவள் பூடகமாக கேட்டாள் .  " இல்ல இல்ல மாப்பிளை அழைப்புக்காக கோவிலுக்கு வரனும்ல அதான் ரெடியாக கேக்குறான் " . சமாளிக்கிறோம் என்பது  அவனுக்கே புரிந்தது . " ஓகே அப்போ அங்கே பாப்போம் " , சொல்லிவிட்டு ஒரு பார்வை பார்த்து விட்டே போனாள் . " பூப்பூக்கும் வாசம் தை  மாசம் " போகும் போது அவள் ஹம்மிங்க் செய்த பாடல் அவன் காதுகளுக்கு கேட்பதற்காக பாடியது போலவே இருந்தது ...

" பஸ் பதினைஞ்சு நிமிஷம் நிக்கும் , காபி , டிஃபன் சாப்புடுறவங்க சாப்டுக்கலாம் " சொன்னவனுக்கு பசி போல சொல்லி விட்டு மறைந்து விட்டான் . அந்த கத்தல் அவனது நினைவோடையை கலைத்தது . லேசாக பசிப்பது போல இருந்தது . கடையில் சூடாக வடை , சமோசா போட்டுக்கொண்டிருந்தார்கள் . சாப்பிடலாமா என்ற யோசனையை உடனே அழித்தான் . " இட்லி இருக்கா ?" , " இல்லை சார் தோசை இருக்கு வேணுமா "
" சரி முருகலா ஒன்னு உடனே கொடுங்க " , " பொறுமையா சாப்பிடுங்க ட்ரைவருங்க நல்லா  சாப்பிட்டுட்டு தான் வண்டிய எடுப்பாங்க " சொல்லிக்கொண்டே ஒரு தோசை என்று சமையலறையை பார்த்து விளித்தான்...

" மச்சான் அவ உன்னையே பாக்குறா " , " தெரியுண்டா  கண்டுக்காத "
சாப்பிட உட்கார எத்தளித்தவனை அவள் பக்கம் கண்ணை காட்டி அழைப்பது போலவே இருந்தது . " பாட்டி நீங்க இங்க உக்காருங்கோ " , " பரவால்லைடா அடுத்த பந்தில  சாப்பிடுறேன் , பசிக்கல " , " பாட்டி அடுத்த பந்தில்லாம்  கிடையாதாம்" .
" அது எவண்டா மாப்பிள்ளை பாட்டிக்கே பந்தி கெடையாது சொல்றது "
" டே , பிரச்சனைய கெளப்பாதடா " இவனுக்கு சிவாவை சமாளிப்பதே பெரிய வேலையாக இருந்தது . இந்த சம்பாஷணையை பார்த்து அவள் ரசித்துக் கொண்டிருந்தாள் . ஒரு வழியாக இந்த பாட்டியை உட்கார வைப்பதற்குள் அங்கே வேறொரு மாமா உட்கார்ந்திருந்தார் . பேருக்கு எதையோ கொறித்து விட்டு அவள் போவதையே ஏக்கமாக பார்த்துக்கொண்டிருந்தான் ...

" மச்சான் நைட் படத்துக்கு போலாமா ? கிரி அண்ணா , கௌசி அக்கா , மாமா எல்லாம் வராங்கடா " , " என்ன படம் ? " , " காதல் கோட்டை " , " நான் வரலடா "
" என்ன மச்சி நெஜத்துலயே காதல் கோட்டை கட்டலாம் பார்க்குறியா ? ,
" அதெல்லாம் இல்லடா , நீ போறதுக்கு முன்னாடி  தம்மு இருந்தா கொடுத்திட்டு போ " அவனை ஏற இறங்க பார்த்த சிவா " ரெண்டு இருக்கு ஒன்னு இந்தா " என்றான் . அவன் ரெண்டையும் பிடிங்கிக் கொண்டு " நீ எப்படி இருந்தாலும் எல்லார் முன்னாலயும் அடிக்க முடியாது , ராஜி வேற வருவா " என்றான் . ராஜி பேரை கேட்டதும் சிவா முகத்தில் பிரகாசம் . அவள் மட்டும் வரவில்லையென்றால் இவனை விட்டு அவன் நகர மாட்டான் . " தம்ம பிடிங்கிட்டு ஏதாவது சாக்கு சொல்லு " சொல்லிவிட்டு சிவா நகர்ந்தான் . சில நிமிடங்களில் ஒரு தனிமை அவனை தொத்திக் கொண்டது ...

"என்ன டீப் திங்கிங் போல ?" , கேள்வி வந்த திசை நோக்கி திரும்பியவனுக்கு மொட்டை மாடி இருட்டில் முழு பவுர்ணமி போல அவள் முகம் பிரகாசமாக இருந்தது . உடனே சிகரெட்டை தூக்கியெறிந்தான் . " சார் , ரொம்ப ரிச் போல , ஃபில்ட்டர் சிகரெட்டை பாதியிலேயே தூக்கி போட்டுட்டீங்க ! " .
என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தான் . " உங்க ஃப்ரெண்ட் இல்லையா ?" , அவளே டாப்பிக்கை மாற்றியது இவனுக்கு சவுகரியமாக இருந்தது .|" அவன் படத்துக்கு போயிருக்கான் , காதல் கோட்டை " .
" கர்ணனோட கவச குண்டலம் மாதிரி கூடவே இருப்பாரு , விட்டுட்டு போயிட்டாரு !" . " நான்  வரல சொல்லிட்டேன் ".
" ஏன் சினிமா பிடிக்காதா ? இல்ல அஜித் பிடிக்காதா ?" .
" சினிமா ரொம்ப பிடிக்கும் , அஜித் பிடிக்கும் " . " ஓஹ் அப்போ வேற ஏதோ  ஸ்பெஷல் காரணம் இருக்கு " , அவனை பார்த்து கண் சிமிட்டுவது போலவே அவனுக்கு பட்டது ...

" சார் சயமபுரம் டோல் கேட் முன்னாடி நிப்பாங்களா ?" , அந்த பெரியவர் கேட்ட  பிறகு தான் அவனுக்கு திருச்சி வரப்போகிறது என்பது புரிந்தது .
"  அப்படி தான் சார் நினைக்கிறேன் , எதுக்கும் கேட்டுக்குங்க " .
திருச்சி தமிழகத்துக்கு மத்தியமான ஊர் . எங்கிருந்தாலும் உடனே வந்து விடுவது போலவே தோன்றும் . தலைநகராக மாறுவதற்கு கூட இதன் பெயர் அடிப்பட்டது . ஆனால் சென்னையை தவிர எந்த ஊரிலும் அவனால் ஒரு வாரத்துக்கு மேல் தங்க முடியாதெனவே தோன்றியது . காஸ்ட் ஆஃப் லிவிங் என்ன தான் அதிகமா இருந்தாலும் அட் எனி காஸ்ட் சென்னையை விடுவதாய் இல்லை என்பதே அவனது குறிக்கோள் . இன்று ஆட் ஏஜென்சியில்  குப்பை கொட்டிக்கொண்டிருந்தாலும் என்றாவது ஒரு நாள் சினிமாவில் பெரிய டைரக்டராக வேண்டுமென்பது அவன் கனவு . ஆனால் அந்த ஒரு நாள் ஒவ்வொரு நாளாக போய்க்கொண்டே தான் இருந்தது ...

" உனக்காக  தாண்டி போல " என்று சொல்ல வேண்டும் போலவே இருந்தது . அப்படி சொல்லும் அளவுக்கு இன்னும் க்ளோஸ் ஆகவில்லை என்பதால் அடக்கிக்கொண்டான் . அஜித் காதல் பண்றத சினிமால போய்  பாக்குறத விட நாமளே பண்ணா என்ன என்று கூட தான்  அவனுக்கு தோன்றியது .
" பெருசா ரீசன் எதுவும் இல்ல , ஆனா போகாததுனால இப்போ உங்க கூட தனியா பேசிக்கிட்டு இருக்கேன் " .
" ஓஹ் , அப்போ போகாததுனால  பேசுறீங்க , நான் என்னமோ என்கூட பேசுறதுக்காக போகலியோன்னு நினைச்சேன் " .
" ம் , செமையா பேசுறீங்க பேச்சுப்போட்டில்லாம் போவீங்களோ ?'
" ஆமாம் , ஸ்கூல்ல எந்த பேச்சுப்போட்டி நடந்தாலும் எனக்கு தான் ஃபர்ஸ்ட்
ப்ரைஸ் , நீங்க என்ன பண்ணுவீங்க என்னோட கடலை போடுறது தவிர ! "
" கவிதை எழுதுவேன் , காலேஜ் டிராமா க்கு வசனம் எழுதுவேன் ! "
" வாவ் இப்போ ஒரு கவிதை சொல்லுங்க பாப்போம் , இன்ஸ்டண்டா "
" டக்குன்னு எப்படீங்க"  , சில நொடிகள் யோசித்தான் ,  ம்ம்
" அம்மாவாசையில் நிலவா , ஓ வருபவள் என்னவள் !.. "
" சூப்பருங்க , எதுவும்  வாரமலர்ல இருந்து சுடலையே ?"
அவள் சொன்னவுடன் அவன் முகம் சட்டென்று மாறியது , அதை கவனித்தவள் உடனே அவன் கையை பிடித்துக்கொண்டு மன்னிப்பு கேட்டாள்.
நல்ல வேளை கேட்டாள் , அவனால் எதை வேண்டுமானாலும்   பொறுத்துக்கொள்ள முடியும் ஆனால் அவன் திறமையை சந்தேகிப்பதை தவிர ...

" சாரி , சும்மா விளையாட்டா தான் சொன்னேன் , சீரியஸா ஆயிட்டீங்க , இன்னும் கோவமா ? " . " அதெல்லாம் ஒன்னும் இல்ல , அதுக்காக நீங்க கைய விட்டுராதீங்க " . " நீங்க தான்  கைவிடாம இருக்கணும் " . சொன்னவள் நாக்கை கடித்துக்கொண்டாள் . அவன் லேசாக கை  வலிக்காமல்  அழுத்தி பிடித்தான்.
இருவரின் மூச்சும் இருவருக்கும் கேட்டது . அவனது ஒரு கை இடுப்பிலும் மற்றொன்று தோளிலும் இருந்தது . உதடுகள் பேசுவதை நிறுத்தியிருந்தன. இருவரின் நெருக்கத்தையும் நிலா ரசித்துக்கொண்டிருக்கிறது ...

சட்டென எதையோ உணர்ந்தது போல " சரி நான் போட்டா , கீழ அம்மா தேடுவா " .
இத்தனை நேரம் சுட்டியாக சிரித்துக்கொண்டிருந்தவள்  பெண்மைக்கே உண்டான வெட்கம் , பயம் , பதட்டத்துடன் பேசினாள் .
" ஏன் ஏதாவது செஞ்சுடுவேனோன்னு பயமா ?"
" சே சே , நீங்க என் சம்மதம் இல்லாம எதுவும் செய்ய மாட்டீங்கன்னு நல்லாவே தெரியும் " அவள் சொன்னதன் அர்த்தம்  அவனுக்கு நன்றாகவே புரிந்தது . " எப்போ சம்மதம் கிடைக்கும் ? " . " இன்னும் மூணு வருஷம் நல்லா படிங்க , வேலைக்கு போங்க , வீட்டுக்கு வந்து பொண்ணு கேளுங்க அப்போ கிடைக்கும் " . " ம் , நீங்க ரொம்ப முற்போக்கான பொண்ணுன்னு நினைச்சேன்".
" ஒரு பையனோட ஜாலியா இருந்தா  தான் முற்போக்கா ? யதார்த்தமா பாதுகாப்பு உணர்வோடு பேசினா தப்பா ? "
" சே நான் அந்த அர்தத்துல சொல்லல , நீங்க காலேஜ் போற வரைக்கும் சொல்வீங்கன்னு நெனச்சேன் , கடகடன்னு கல்யாணம் வரைக்கும் போய்ட்டீங்களே ? " . " ஏன் உங்களுக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலையா ?" . " உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு , பட் எனக்கு காலேஜ் முடிச்சுட்டு சினிமால சேரனும் , பெரிய டைரக்டரா ஆகணும், அங்கல்லாம் மாச சம்பளம் இருக்குமா தெரில " .
அவனை சிறிது நேரம் உற்றுப் பார்த்தாள் . " நீங்க நேத்து பார்த்த பொண்ணுக்காகல்லாம் உங்க லட்சியத்த விட வேணாம் , ஆல் தி பெஸ்ட்" .
சொல்லிவிட்டு இவனது பதிலை எதிர்பார்க்காமல் உடனே ஓடிவிட்டாள் ...

கல்யாண மண்டப வாசலில் ஆட்டோவிலிருந்து இறங்கியவுடனேயே
" வாடா டைரக்டரூ " சொல்லிக்கொண்டே சாம்பு மாமா கட்டித் தழுவிக்கொண்டார் . "  என்ன மாமா எப்படி இருக்கீங்க ?" , \
" பேஷா இருக்கேண்டா , அம்மா வரலியா ? " , " இல்ல அம்மாக்கு  கொஞ்சம் உடம்பு சரியில்ல , அதான் ட்ராவல் பண்ண வேண்டாமேன்னுட்டு "
" சரி தான் , எனக்கே முன்ன மாதிரி முடியறதில்லை , புகையிலையே போடக்கூடாதுன்னு டாக்டர் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டார் " சொல்லிவிட்டு வெறும் வெத்தலை சீவலை மட்டும் போட்டுக்கொண்டார் .
" இந்தோ வந்துட்டானே உன் மாப்பிள்ளை , இனிமே உங்களை பிடிக்க முடியாது ," அப்படியே எங்களை டிஃபன் சாப்பிட சொல்லிவிட்டு மண்டபத்துக்குள் போனார் மாமா ...

அப்பா மறைவுக்கு பிறகு அவன் தம்மடிப்பதை நிறுத்தியது மறந்து போய் நீட்டிய சிவா , பிறகு நியாபகம் வந்தவனாய் ஒன்றை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு மற்றதை பற்ற வைத்தான் . " அப்புறம் டிஸ்கஷன்லாம் எப்புடி மாப்பிளை இருக்கு ? " . " ம்ம் , போய்கிட்டு இருக்கு , இது நல்லபடியா முடிஞ்சவுடனே கதை கேக்குறதா ப்ரொடியூசர் சொல்லியிருக்கார், பார்க்கலாம் " . " ஆட் ஏஜெண்சி வேலை ?" . " இல்ல ஸ்கிரிப்ட் ஒர்க் இருக்கறதுனால அங்க  ஒழுங்கா போகல " . சிறிது நேர மவுனத்துக்கு பின்
சிவா " சுந்தரி ஊருக்கு வந்துட்டா மாப்பிள்ளை , இன்னும் கொஞ்ச நேரத்துல மணடபத்துக்கு வருவா " என்றான் . " ஓ " அவளுக்காக தான வந்தேன் என்று சொல்ல ஏதோ ஒன்று அவனை தடுத்தது . " கொஞ்ச வருசத்துக்கு முன்னால ஒரு கல்யாணத்துல வச்சு பார்த்தேன் , அவ கொஞ்சம் அப்படியே தான் இருக்கா , மாப்பிள்ளை தான் சொட்டைல்லாம் விழுந்து குண்டாகிட்டாப்படி , பேங்க்ல நல்ல வருமானம் போல " .
 " உன் பிசினெஸ் லாம் எப்புடி போகுது ? " , " நமக்கென்ன பெருசாவும் இல்ல , சிறுசாவும் இல்ல இந்த ஊர்ல  ஓட்டுற அளவுக்கு போவுது " . பேசிக்கொண்டே மண்டபத்தை  நோக்கி நகர்ந்தார்கள் . சுந்தரியின் முகம் அவனுக்கு சட்டென்று வந்து மறைந்தது ...

" எக்ஸ்கியூஸ் மீ " , எத்தனை வருடங்கள் ஓடினாலும் மறக்க முடியாத  அந்த குரலை கேட்டவுடன் சட்டென்று திரும்பினான் . " எப்புடி இருக்கீங்க " அவள் விழிகள் ஆச்சர்யத்தில் அகலமாக விரிந்தது . " நல்லா  இருக்கேன் , நீ எப்புடி இருக்க ? " , " ம்ம் கல்யாணம் ஆனதுக்கப்புறம் எல்லா பொம்பளைங்களும் எப்புடி இருப்பாங்களோ அதே மாதிரி வீடு , புருஷன் , புள்ளைங்க மாமியார்னு குடியும் , குடித்தனமுமா இருக்கேன் " . சிரிப்போடு சொன்னாலும் லேசான விரக்தி இருப்பது போலவே பட்டது ...

" இதுக்கு தானே ஆசைப்பட்ட " . " ஹா ஹா நான்  மட்டுமா , எல்லா பேரன்ட்சும் இதுக்குள்ள பொண்ணுங்கள தள்ளி விட்டு ஹாயா இருக்கத்தான் பாக்குறாங்க , உங்க அம்மா மட்டும் விதிவிலக்கு " ,
அவள் அம்மாவை பற்றி சொன்னவுடன் அவன் இடைமறித்தான் .
" இல்ல இல்ல அவங்க சொல்லிகிட்டே தான் இருக்காங்க நான் தான் செட்டிலாகாம எப்புடின்னு தள்ளிப் போட்டுக்கிட்டே இருக்கேன் " .
" நானும் குடும்பத்தோட உங்க படத்த தியேட்டர்ல பார்க்கனும்னு ரொம்ப ஆர்வமா இருக்கேன் " . " கண்டிப்பா கூடிய விரைவில் நடக்கும்னு நம்புறேன் " .
" உங்க சாக்க வச்சு தான் தியேட்டர் போகனும் , இவருக்கு சினிமால்லாம் சுத்தமா பிடிக்காது , டிசம்பர் சீசன் வந்தா அம்மாவோட கச்சேரிக்கு போயிடுவார் " . " உனக்கு சினிமான்னா ரொம்ப பிடிக்குமே " .
" என்ன பண்றது கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணுங்களுக்கு தனியான்னு என்ன இருக்கு ? புகுந்த வீட்டுல பிடிக்கறது தான் எங்களுக்கும் " .
அறிவுபூர்வமாக பேசிய சுந்தரி போய் அலுப்புடன் பேசிக்கொண்டிருந்தாள் .
" இத நான்  கம்பளையிண்டா சொல்லல , ஜஸ்ட் சொன்னேன் " .
அவள் சட்டென்று சுதாரிப்பது  போலவே பட்டது .  " இப்போ எங்க இருக்கீங்க "
" அட் ப்ரெசென்ட் பெங்களூர்ல , அவருக்கு எங்கெங்கே ட்ரான்ஸ்ஃபர் ஆறதோ அங்கங்க போகணும் " . கண்களுக்கு கீழ் கருவளையம் , அகலமான இடுப்பு , இதை தவிர அவளிடம் பெரிய வித்தியாசம் தெரியவில்லை .
" என்ன பழைய சுந்தரி இப்படி ஆயிட்டாளேன்னு பார்க்குறீங்களா ?"
எத்தனை வருடம் ஆனாலும் அவள் ஷார்ப்னஸ் போகவில்லை ...

" அதெல்லாம் ஒண்ணுமில்லை "  , அவளிடம் அப்படி சொன்னாலும் உண்மையில் அவள் உடலழகை விட அவள் பேச்சை தான் அவன் அதிகம் ரசித்திருக்கிறான் . ஆவலுடன் பேசும் போது நேரம் போவதே தெரியாது .  அவன் நெறைய ஆச்சர்யப்பட்டிருக்கிறான் , சின்ன வயசுலயே அவள் பாரதியார் ல இருந்து பாரதிராஜா வரை எல்லாம் பேசுவாள் . ராஜேஷ்குமார் , சுபா  மட்டும் படித்துக்கொண்டிருந்தவனுக்கு தி.ஜா, பாலகுமாரன், சுஜாதா இவர்களை அறிமுகப்படுத்தியது அவள் தான் . அவன் வாசிப்பை விஸ்தாரமாக்கியவள் அவள் . பெண்களின் அறிவு விசாலம் எல்லாம் கல்யாணம் என்ற வட்டத்துக்குள் சுருங்கிவிடுகிறது . ஒருவேளை அவனை கல்யாணம் செய்து கொண்டிருந்தாலும் இப்படித்தான் அடங்கி அவனுக்கேற்றார் போல மாறியிருப்பாளோ என அவனுக்கே யோசனையாக இருந்தது . " என்ன டைரக்டர் சார் , அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட்டுக்குள்ள இப்பவே முங்கிட்டீங்களா ?" அவள் கேட்டவுடன் தான் அவன் நார்மலுக்கு வந்தான் . " ரொம்ப குழப்பிக்காதீங்க , வாழ்க்கை யார் சொல்லியும் நிக்காது , ஓடிக்கிட்டே இருக்கும் , எல்லோரும் பிறக்கிறோம் இறக்குறோம் , ஆனா கண்ணதாசன் சொன்ன மாதிரி கலைஞனுக்கும், கவிஞனுக்கும் என்னிக்குமே சாவே இல்லை . சில்வர் ஜுப்ளீ கொண்டாடுற மாதிரி ஒரு படம் பண்ணுங்க . அப்போ தான் சில தியாகத்துக்கும்  , வலிக்கும் அர்த்தம் கிடைக்கும் . ஆல் தி பெஸ்ட் " . அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே " அம்மா உன்ன எங்கெல்லாம் தேடுறது , என்ன டாட்டா கூட்டிட்டு போறேன்னு சொன்ன " கேட்டவனுக்கு எட்டு வயதிருக்கும் , அவனை  பார்த்தவுடன் லேசாக பம்மினான் ...

" ஹை கண்ணா இங்க வா " அவன்  கூப்பிட்டவுடன் அம்மாவை பார்த்தான் .
" யாரும்மா இவரு ?" , " கண்டுபிடி , நான் சொல்லிருக்கேன் மெட்ராஸ்ல பெரிய ஆளுன்னு " . " ஓ டைரக்டர் அங்கிள் ' . " ஆமாம் கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டியே !" . " அங்கிள் நீங்க சிவகார்த்திகேயன நேர பாத்துருக்கீங்களா ? " , " பாத்துருக்கேன்பா " , " ஐ சூப்பர் , நான் உங்களோட போட்டோ எடுத்துக்குறேன் " . " எல்லாம் எடுத்துக்கலாம் , உன் பேரென்ன ?"

  " கார்த்திக் " , உங்க பேரென்ன ? . " கார்த்திக் " ...

தொடரும் ...













No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...