எதையுமே லட்சியம் செய்யாத பணக்கார இளைஞன் மற்றும் சினிமாவில் இசையமைப்பாளராக வேண்டும் என்ற இலட்சியமுள்ள நடுவயதுக்காரன் இவர்களின் எதிர்பாரா சந்திப்பு ஏற்படுத்தும் முரண்பாடுகளே " முரண் "... ஹிட்ச்காக்கின் " Strangers on a train " எனும் படத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் படம் ...
கோடீஸ்வரர் ஜெயப்ரகாஷின் மகன் அர்ஜுனாக பிரசன்னா , இசையமைப்பாளர் நந்தாவாக சேரன் , சேரனின் மனைவியாக நிகிதா , காதலியாக ஹரிப்ரியா இப்படி சில கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு முழு நீள படத்தையும் முடிந்தவரை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ராஜன் மாதவ் ...
வயதில் சிறியவனாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக சேரனை தன் முழு ஆளுமைக்குள் கொண்டு வரும் பிரசன்னாவின் கேரக்டரும் , நடிப்பும் பிரமாதம் ... இவரை விட்டால் யாரையும் யோசிக்க முடியாத அளவிற்கு பணக்கார கேசுவல் இளைஞனாக மிக இயல்பாய் பொருந்துகிறார் ... நல்ல நடிப்பு திறமை இருந்தும் பெரிய பிரேக் கிடைக்கவில்லையே என்று நான் நினைத்து வருத்தப்படும் நடிகர்களுள் இவரும் ஒருவர் ...
சேரனின் வயதும் , தோற்றமும் இந்த கேரக்டருக்கு கட்சித பொருத்தம் ... அவர் நடிப்பில் பிரசன்னா அளவு பிரகாசிக்காவிட்டாலும் அண்டர்ப்ளே செய்திருப்பதை பாராட்டலாம் ... வசன ( குறிப்பாக ஆங்கில ) உச்சரிப்புகளிலும் , உடல்மொழியிலும் அதீத கவனம் செலுத்தினால் மட்டுமே சேரன் நடிகனாக ஒருபடி மேலே போக முடியும் ...
நிகிதா புருசனை மதிக்காத மனைவி பாத்திரத்தில் அளவாக நடித்து ஆண்களின் எரிச்சலை சம்பாதிக்கிறார் ... ஹரிப்ரியாவின் நடிப்பு சேரனுடன் அவருக்குள்ள காதலை போலவே மனதில் ஒட்டவில்லை ... சில காட்சிகளே வந்தாலும் தன் அழகால் லிண்டா சிலாகிக்க வைக்கிறார் ...
த்ரில்லர் படம் என்பதால் முகம் சுழிக்க வைக்கும் படி காட்சிகளை வைக்காமல் குடும்பத்துடன் காணும் படி படம் எடுத்ததற்கு இயக்குனரை பாராட்டலாம் ... அதே போல பிரசன்னா த்ரில் உணர்வைக் காட்ட அதி வேகமாக காரை ஓட்டுவது , சேரனை மாங்காய் திருட வைப்பது , நிகிதா கள்ள காதல் செய்யும் செல்போன் காட்சியை பிரசன்னா மூலம் ஆடியன்சுக்கு நேரடியாக காட்டாமல் சேரனிடம் காட்டி " கிளாரிட்டி நல்லா இருக்குல்ல " என்று ஒரு வரியில் சொல்லி அதன் அழுத்தத்தை உணர வைப்பது , ஆக்சிடென்ட் யாருக்கு வேணா நடக்கலாம் என்று சொல்லி பிரசன்னா சேரனை தன் வழிக்கு இழுப்பது என இயக்குனர் ஸ்கோர் செய்யும் இடங்கள் நிறைய ...
பாடல்கள் வேகத்தடையாய் இருந்தாலும் பின்னணி இசையும் , ஒளிப்பதிவும் படத்தின் பலங்கள் ... " நான் என்ன கோழையா ? .. அப்போ நான் என்ன முட்டாளா ? " என ஆங்காங்கே வரும் பளிச் வசனங்கள் பலம் ...
இப்படி நிறைகள் நிறைய இருந்தாலும் த்ரில்லர் படங்களுக்குன்டான அதிவேக திரைக்கதை இல்லாமல் படம் அப்பப்போ தொய்வாக நகர்வது , கொலைக்கு கொலை என பிரசன்னா சேரனிடம் டீல் போட்ட பிறகு அதே விறுவிறுப்புடன் படம் நகராதது , மூன்றாவது மனிதனை வைத்து தன் அப்பனை கொலை செய்ய திட்டம் போடும் பிரசன்னாவின் யோசனை நன்றாக இருந்தாலும் , அதை நிறைவேற்ற ஒரு போலீஸ்காரனை கொலை செய்யும் பிரசன்னாவே ஏன் அப்பாவையும் கொன்று விடக்கூடாது எனும் லாஜிக் இடிப்பது , நிகிதா சேரனை இவ்வளவு வெறுத்தும் எதற்காக திருமணம் செய்து கொண்டாரென்பதை விளக்காதது போன்ற குறைகளை தவிர்க்காததால் ஹைவேஸில் ஆரம்பிக்கும் " முரண் " பயணம் மிதமான ரன்னாகவே ( ஓட்டம் ) முடிகிறது ...
ஸ்கோர் கார்ட் : 41
4 comments:
அண்ணே சூப்பர்
நன்றி தம்பி ...
அருமை..
ரெவெரி said...
அருமை..
நன்றி ...
Post a Comment